Thursday, January 15, 2009

பிரிவு ..


இந்த காரியங்களை இனி யார் செய்வார் என்ற கேள்வியை
மனதில் தேக்கியபடி மௌனித்திருக்கும் ஊர்...

55 ஆண்டுகள் அவரே உலகமென வாழ்ந்து இன்று அவர்

உலகை விட்டு போனபின் உண்மையை ச்ரமத்துடன் ஜீரணிக்க முயலும் அம்மா..

இத்தனை ஆண்டுகள் அவருடைய நிழலாக வாழ்ந்து இன்று நிஜம் போன பின்
தங்களுக்கான நிழல் குறித்த
நிஜமான அச்சங்களுடன் அவர் சகோதரர்கள்..

தாய்போல பாசத்தை காட்டிய தந்தையை இழந்த அக்காக்கள்..

இரண்டாம் முறையாக அப்பாவை இழந்த வருத்தத்தில் என் சித்திகள்...

அவருக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடிய காரியத்தையே இனி செய்வோம் என்ற வைராக்யத்துடன் மகன்கள்..

என்றோ தொலைத்த அப்பாவை இன்று தேடிக்கொண்டிருக்கும் நான்..

காரியம் முடிந்து ஊர் திரும்புகையில் திரும்பி பார்த்தேன்,
அடங்கிய புழுதியில் பேருந்து நிழல் குடையில் வாசகம்
உபயம்: N.R.கோபாலய்யர், லஷ்மி விலாஸ்.
வெயிலில் நான்..






அப்பா...











நாட்டுககு நாயகன் நம்மூர்த்தலைமகன்
காட்டுச் சீவிகயொன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே..
( திருமந்திரம் 153)

எல்லோரும் காத்திருந்தனர். தத்தம் கடைகளை மூடிவிட்டு. கடைசி முறை அவரை
காண. கடந்த அறுபது ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான முறை இதே கடை வீதியில் அவர் நடந்தும், மொபெடில்லும் பிரயாணித்து இருக்கிறார். ஆனால் இன்று கடைசி. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்
இந்த ஊரில் அவர் ஹோட்டல் வைக்க தீர்மானித்ததும், அவருடைய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் குலைக்கும் விதத்தில் பல விஷயங்கள் நடந்திருக்கலாம். லைன் வீடுகள், s&t ஒர்க் ஷாப், ஒரு சில சந்துகள், இரு சிறிய கோவில்கள் தவிர பெரிதாய் எதுவுமிருக்கவில்லை இந்த ஊரில். ஆனால் ஆரம்பகால அடிகளை தாங்கிக்கொண்டு இங்கேயே இருந்த அவரை இந்த ஊர் ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்திருக்க வேண்டும். உறவினர்களெல்லாம் சென்னை பட்டினத்தில் கோலோச்சிய காலத்தில் பக்கத்தில் இருக்கும் கோவைக்கு கூட புலம் பெயராமல் அவரை இந்த ஊர் தன்னிடத்தில் வைத்து கொண்டது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று இந்த ஊர் தன்னுடைய அலங்காரத்தை மாற்றிக்கொண்டு நிற்கிறது. ஆனால் அலங்காரத்தை புறந்தள்ளி உள்ளிருக்கும் அடையாளத்தை பார்த்தல் ஒவ்வொன்றிலும் இவர் இருக்கிறார். கோவலில் இருந்து ஆரம்பித்து கருமாதி செய்யும் இடம் வரை இவருடைய பங்களிப்பு தெரிகிறது.
அவருடைய மகன்களும் மகள்களும் வாய்பொத்தி விம்மியபடி இருக்க ஊர் மக்களோ கதறி அழுகின்றனர்.ஜாதி, மதம், கட்சி பேதங்களை கடந்து அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவர் ஒரு அரசியல் வாதியோ,ஜாதி சங்கத தலைவரோ, பெரும் மில் அதிபரோ கிடையாது.
"முக்தசங்கோ நஹம்வாதி திருத்யூர் சாகச மன்விதஹ
ஸித்த ஸித்யோர் நிர்விகார கர்தா சாத்விக உச்யதே" என்ற கீதை வாக்கியங்களை
வாழ்ந்து காட்டிய ஒரு உழைப்பாளி. ' இந்த வயதில் இப்படி உழைக்கணுமா? சம்பாதித்ததெல்லாம் போதாதா என்று அவருடைய உழைப்பை பணத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது எங்களால். இன்று ஊர் அழும்போது அவர் உழைத்ததன் காரணம் புரிகிறது. அவர் செய்த தர்ம காரியங்கள் அனைத்திற்கும் ஊற்றுக்கண் அந்த கடைதான். அவர் பணியை தொடர்வதே அவரை இழந்த வலியை குறைக்கும்.

இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.